கடந்த வாரம் செய்யாறு உதவும் கரங்கள் சார்பாக நடந்த 4-ஆம் ஆண்டு, ஐம்பெரும் விழாவில் எனக்கு “இளம் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது. நானும் என் மனைவியும் இணையராக பெற்றுக்கொண்டோம்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட உள்ளூர் வாசிகள் கலந்து கொண்டனர். மேலும் சென்னையில் இருந்து திரைப்பட துறையினர், தொழிலதிபர்கள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் வருகை தந்திருந்தனர். மேலும், அரசு ஊழியர்கள், ஆசிரிய பெருமக்கள், மாணவர்கள் என பெருந்திரளான அன்பர்கள் வந்திருந்து வாழ்த்தினர். உண்மையில் மிக்க மகிழ்ச்சி…

என்னை எனக்கு அடையாளம் காட்டியது என் மனைவி என்றால், என்னை என் சொந்த மண்ணிற்கு அடையாளம் காட்டியது செய்யாறு உதவும் கரங்கள் நிறுவனத்தலைவர் திரு.ஆதிகேசவன் அய்யா அவர்கள் என்றால் அது மிகையாகாது. சில ஆண்டுகளுக்கு முன்னரே திரு.ஆதிகேசவன் அய்யா என்னை மாநில அளவிலான “சிறந்த சமூக சிந்தனையாளர்” என்கிற விருதுக்கு பரிந்துரைத்திருந்தார். அய்யா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் திருப்பெயரால் அந்த விருது எனக்கு வழங்கப்பட்டது. அது எனக்கு மிகப்பெரிய நற்பெயரை பெற்று தந்தது, அங்கீகாரத்தை வழங்கியது. இந்த முறை “இளம் சாதனையாளர் விருது”, ஆம் இந்த விருது இன்னும் பல சாதனைகள் செய்ய என்னை தூண்டும், உண்மைதான்…

ஒவ்வொரு தொழில் முனைவோரும் அங்கீகாரத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் ஒவ்வொருவருமே பாராட்டுக்காகவும், அங்கீகாரத்திற்காகவும் காத்திருக்கிறார்கள். எப்போது ஒருவரின் திறமை, நற்செயல்கள் அங்கீகரிக்கப்படுகிறதோ அப்போது அவரால் இந்த சமூகத்திற்கு மேலும் பல நன்மைகள் வந்து சேரும், பங்களிப்பு அதிகரிக்கும். சரியான நபர்களை கண்டறிந்து, இந்த சமூகத்திற்கு அடையாளப்படுத்தி காட்டி இருக்கிறார் அய்யா அவர்கள். நன்றிகள் கோடி…

இப்படியான விருதுகள் எனக்கான சமூக பொறுப்பை மேலும் அதிகரிக்கவே செய்கிறது. நான் இன்னும் கவனமாக என் செயல்களை, திட்டங்களை வெளிப்படுத்த என்னை நான் ஆயத்தப்படுத்திக் கொள்கிறேன்.

சிறப்பு நிகழ்வாக இந்த நிகழ்ச்சியில் சுமார் மூன்று லட்சம் ரூபாய் அளவிற்கு பல நல திட்ட உதவிகள் இயலாதோர்க்கு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திரைப்பட தயாரிப்பாளர் திரு.குமரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் திரு.ரவிபாலன் நவலடி கேப்பிட்டல்ஸ், திரு.TGM.விஜயவர்மன், கேப் ஸ்டோன் எக்ஸ்போர்ட் அண்ட் இம்கோர்ட், திரு.ராஜசேகரன், தொழிலதிபர், திரு.முத்துசாமி, தொழிலதிபர், திரு.ராஜ்குமார், தொழிலதிபர், மக்கள் மருத்துவர் திரு.கார்த்தி மற்றும் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் திரு.குமார் அவர்கள் போன்ற பெரும் ஆளுமைகள் கலந்துகொண்டனர். என் தமிழ் ஆசிரியர் தமிழ்ச் சுடர் மெய்.பூங்கோதை அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். என் மாமனார் திரு.எழுமலை, பதிவுத்துறை-ஓய்வு அவர்கள் பெரிய அளவிலான வாழ்த்து மடல் ஒன்றை கொடுத்து எங்களை மகிழ்வித்தார். விருது பெற்றவர்களை அனைவரும் வாழ்த்தினர். இந்நிகழ்விற்கு வந்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *