7 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் பயிற்சி ஒன்றில் கலந்துகொள்ள மதுரை சென்றிருந்தேன். அப்படியே அருகில் உள்ள கீழடி கண்டு வந்தேன். சிறந்த அனுபவம்…

மதுரை கீழடி அருங்காட்சியகம் தமிழனின் பெருமையையும், பழமையும் மட்டும் பறைசாற்றவில்லை. அது நமது பண்டைய கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும் பறைசாற்றுகிறது. பண்டைய தமிழனின் வாழ்வியல் அறிவியல் பூர்வமானது என்பதை நமக்கெல்லாம் விளங்கச் செய்கிறது. அங்கே கிடைக்கப் பெற்ற பொருட்களை அகழ்வு செய்த இடத்தை நேரடியாக நான் சென்று பார்த்தேன்.

8 குழிகள் இதுவரை எடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் கிடைக்கப்பெற்ற பொருட்களை 2600 ஆண்டுகளுக்கு முந்தியவை. அவற்றை அருங்காட்சியகமாக அமைத்திருக்கிறார்கள். செட்டிநாடு வீடுகள் போன்ற அமைப்பில் குடில்கள் அமைத்து அந்த அருங்காட்சியகம் மிக சிறப்பாக மிளிர்கிறது. ஒவ்வொரு குடிலிலும் வேறு வேறு தளங்களில் தமிழனின் பயணத்தை விவரிக்கிறது. ஒரு குடிலில் அவனது வாழ்வியல், மறுகுடிலில் அவன் பயன்படுத்திய மண்பாண்டங்கள் மற்றும் மண்பாண்ட தொழில் உபகரணங்கள், மற்றொரு குடிலில் நெசவுத்தொழில், அது சார்ந்த கருவிகள், கடல் சார்ந்த பயணங்களுக்கான கருவிகள் அது தொடர்பான ஆதாரங்கள், இரும்பு உலோக பொருட்கள், செப்பு பொருட்கள், பல வகையான படிகம் போன்ற கண்ணாடி கற்கள், ரோம் நகர வாணிக தொடர்புகளுக்கான ஆதாரங்கள், தங்க அணிகலன்கள் உள்ளிட்டவை அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

உண்மையில் இன்றைய உலகம் நாகரீகம் என்கிற வார்த்தையை கண்டுபிடிப்பதற்கு முன்னால் நாகரீகமாக வாழ்ந்தவன் தமிழன். அறிவியல் பூர்வமாக வாழ்ந்தவன் தமிழன் என்பதில் பெருமையும் கர்வமும் கொள்கிறேன். மெய்சிலிர்க்கும் அனுபவம்தான் அது. வாய்ப்பு இருப்பவர்கள் கட்டாயம் ஒருமுறை சென்று பார்க்க வேண்டிய இடம் மதுரை கீழடி தொல்பொருள் ஆராய்ச்சியகம் மற்றும் அருங்காட்சியகம்.
Related