தாயும், தந்தையும் முன்னறி தெய்வம் – குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தோம்…
கணவனே கண் கண்ட தெய்வம் – பெண்களுக்கு சொல்லி வைத்தோம்…
ஆனால், “செய்யும் தொழிலே தெய்வம்” என அனைவருக்கும் போதித்து வைத்திருக்கிறோம்…
செய் தொழிலுக்கு ஒரு நாள் வைத்து கொண்டாடியவன் தமிழன். செய்யும் தொழிலுக்கும் உதவியாக இருக்கும் உபகரணங்களுக்கும் நாள் வைத்து நன்றி செலுத்தியவன் தமிழன். நன்றி செலுத்துவதை கொண்டாட்டமாக, விழாவாக வாழ்வின் ஒரு பாகமாக மாற்றியவன் தமிழன்…
இங்கே தெய்வங்களும், கொண்டாட்டங்களும் நன்றி செலுத்த உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அதில் ஆழ்ந்த அர்த்தமும் இருக்கிறது.
நன்றி மறந்த இந்த உலகில், நன்றிகள் எல்லாம் கெட்டுப் போன இந்த உலகில் மறவாமல் எல்லாவற்றுக்கும் நன்றி சொல்ல விழாக்களையும், கொண்டாட்டங்களையும், தெய்வங்களையும் கண்டெடுத்தான் ஆதித்தமிழன்…
அதில் உளவியலும் அறிவியலும் ஆழமாக இருக்கத்தான் செய்கிறது.
நம்பிக்கை உளவியல் என்றால் மூடநம்பிக்கை மட்டும் எப்படி அறிவியலாகாது? உளவியல் ஆகாது? மூடத்தனமான நம்பிக்கை தான் ஆழமான நம்பிக்கை என்று உளவியல் வரையறுக்கிறது. ஆழமான நம்பிக்கை தான் பல அளப்பரிய செயல்களை இந்த உலகில் செய்து முடிக்கிறது.
Apple நிறுவனர் திரு. STEVE JOBS ஒருமுறை சொன்னார் “Stay Hungry, Stay Foolish” என்று.
மூடத்தனங்களிலிருந்தும், பல முட்டாள்தனங்களிலிருந்தும் தான் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் இங்கே உதயமாகி இருக்கின்றன. நவீன மொழி அதை Crazy என்கிறது.
அறிவியலில் இருந்து இந்த படைப்பு உருவாகவில்லை. ஏற்கனவே இருக்கின்ற படைப்புகளில் இருந்து தான் நமது அறிவியல் உருவாகி இருக்கிறது.
கொண்டாட்டங்களில் என்ன மூடநம்பிக்கை மற்றும் ஆத்திகம், நாத்திகம்? அனைவரும் கொண்டாடுவோம்.
எனவே எந்த ஒரு கொண்டாட்டத்தையும், எந்த ஒரு விழாவையும் அதன் பின்புலத்தை, அதன் காரணங்களை ஆய்ந்து நாம் கொண்டாடத்தான் வேண்டும். சிறப்பு செய்யத்தான் வேண்டும். நம் பிறப்பே கொண்டாட்டம் தானே.
அனாதி காலம் தொட்டு நாம் தொழில் முனைவோர் என்பதற்கு இன்றைய ஆயுத பூஜை விழா கொண்டாட்டம் கூட ஒரு சான்று தான்.
நாமெல்லாம் தமிழர் பரம்பரை என்றும், தொழில் முனைவோர் வர்க்கம் என்றும் திமிரு கொண்டு கொண்டாடுவோம்…
அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!!
– பாசிடிவ் பெருமாள்