அரசின் பல்வேறு துறைகளின்கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் வாங்க வேண்டும்.

ஒரு மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் அந்த மாநகர, நகர அமைப்பின் மூலம் அனுமதி வாங்க வேண்டும் என்கிறது சட்டம். இதுதான் தொழில் உரிமம், அல்லது வணிக உரிமம் என்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் சட்டம் என்றாலும், அப்போதுதான் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிசெய்ய முடியும். தவிர தொழில்வரி போன்றவையும் வசூலிக்க இது வகை செய்கிறது.

அரசின் பல்வேறு துறைகளின்கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் வாங்க வேண்டும்.

#யாருக்கு_தொழில்_உரிமம்_தேவை?

ஒரு தொழிலை தொடங்குவதற்கு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் அனுமதி வாங்கியிருந்தாலும், மாநகர, நகர பகுதியில் தொடங்குபவர்களுக்கு இந்த அனுமதி வேண்டும்.

குறிப்பாக தொழிற்சாலைகள், சேமிப்புக் கிடங்குகள், பதப்படுத்தும் நிறுவனங்கள், தீப்பெட்டி தயாரிப்பு, அச்சகம், வெல்டிங் பட்டறைகள், பெட்ரோல் பங்க் போன்றவை பிற அரசு துறைகள் மூலம் அனுமதிகள் வாங்கியிருந்தாலும் நகராட்சி அனுமதியும் வாங்க வேண்டும்.

தவிர உணவு தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கரிகள், பால் மற்றும் இறைச்சி விற்பனை யாளர்கள், பள்ளி, கல்லூரி உணவு விடுதிகள், சமையல் ஒப்பந்தக்காரர்கள் திருமண மண்டபம், ஓட்டல், மளிகை கடைகள், தேநீர் கடைகள், குளிர்பான கடைகள், மொத்தம் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்களும் இந்த அனுமதி வாங்க வேண்டும்.

அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களில் தொழில் நடத்துபவர்கள் என்றும், உணவு பொருள் தயாரிப்பு மற்றும் சாப்பிடும் நிலை வரை உள்ள அனைத்து உணவு வணிகர்கள் என்றும், மின்சக்தி மற்றும் டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தி தொழில் செய்பவர்கள் என்றும் பல வகைகளில் இந்த தொழில்களை வகைப்படுத்துகிறது சட்டம்.

#உரிமம்_பெறும்_நடைமுறை

விண்ணப்பதாரர் தங்களது பெயர் மற்றும் தொழில் விவரம், தொழில் நடத்தப்பட உள்ள இடத்தின் முகவரி போன்ற விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ரூ.20க்கான முத்திரைத் தாளில் தொழில் உரிமத்திற்கான திட்டங் களைப் பின்பற்றுவேன் என்பதற்கான உறுதி மொழி பத்திரம் கொடுக்க வேண்டும். இதனடிப்படையில் தொழில் உரிமம் கிடைக்கும். இந்த உரிமத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் உரிமம் புதுப்பிக்கப் படவில்லையென்றால் புது உரிமம் எடுக்க வேண்டும்.

#ஏன்_வாங்க_வேண்டும்

இது போன்ற அனுமதிகளை நகராட்சிகள் மூலம் வாங்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணம் மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் தொழிற்சாலைகள் அமைத்தால் அது இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்பதால்தான். என்ன தொழில் எந்த பகுதியில் தொடங்க உள்ளனர் என்பதை அறிந்து அதற்கேற்ப அனுமதி வழங்கப்படும். இதற்கு எழுத்து பூர்வமாக அத்தாட்சிகள் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.

#நடைமுறை_என்ன?

தொழில் அமைய உள்ள கட்டடத்தின் அங்கீகரிக்கப்பட்ட திட்டம் அல்லது மண்டல செயற்பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட கட்டட சான்றிதழ், அந்த கட்டட உரிமையாளரின் ஆட்சேபணையில்லா சான்றிதழ், நடப்பு ஆண்டு வருமான வரியின் நகல், தொழில் வரியின் நகல், மாவட்ட தீயணைப்பு அதிகாரியின் ஆட்சேபனையில்லா சான்றிதழ், தொழிற்சாலை ஆய்வாளர்களிடமிருந்து பெற்ற சான்றிதழ், அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் என சட்டம் நடைமுறைகளை வைத்துள்ளது.

தங்கும் விடுதிகள் மற்றும் உணவகம் என்றால் குடிநீர் வாய்ப்புகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் என்றால் பணியிடம், கட்டிடம், அதற்கான இதர அனுமதிகள், எத்தனை பணியாளர்கள் பணிபுரிய உள்ளனர் என்கிற விவரங்கள் கொடுக்க வேண்டும். தவிர குறிப்பிட்ட தொழிற்சாலை தொடங்குவதற்கான திட்ட வரைபடம் போன்றவை இணைக்க வேண்டும்.

அந்த இடத்தின் காற்றோட்ட வசதி, தீ தடுப்பு வசதிகள், அறைகள், கட்டிட உயரம் போன்றவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தொழிற்சாலை ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டவர்களின் குறிப்பின்பேரில் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.

இந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் பட்சத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும் சட்டத்துக்குட்பட்ட தொழில்கள் என்கிற அடையாளமும் கிடைக்கிறது.

இந்த தொழில் உரிமம் பெறாமலோ அல்லது புதுப்பிக்கப்படவில்லை என்றாலோ தொழிலை முடக்கி வைக்கவும் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *